Usthad Abu Saalih AlHikami  ·  Knowledge · Guidance · Wisdom

வாசிக்க மறந்த சமூகம்!

بسم الله الرحمن الرحيم

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அழகிய பெயர்களால் ஆரம்பம் செய்கிறேன்

நூல்: அகதிகள்
ஆசிரியர்: மருதன்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

மொட்டை மாடியில் இருந்த எனது தந்தைக்கு தேநீர் கொடுத்து வரும்படி ஏவினாள் என் தாய்.

படிகட்டுகளைக் கடந்து சிந்தாமல் சிதறாமல், பக்குவமாக அவர் முன் சென்று தேநீரை நீட்டினேன்.

எனது மூச்சு இறைத்ததை அவர் கவனித்தார்.

“உன் உடல் நலத்தை கவனி!
இந்த மாடிப்படியை ஏறி வருவதற்கே இப்படி மூச்சு வாங்குகிறதே?!..? நாளை இந்த நாட்டை விட்டும் நீ விரட்டி அடிக்கப்பட்டால் குறைந்தபட்சம் ஓடி உன் உயிரைக் காத்துக் கொள்வதற்காவது தெம்பு வேண்டாமா?!!” என்று கேட்டார்.

கூரிய வில்லைப் போன்று , சீரி உள்ளத்தில் பாய்ந்து , சிந்தனையைத் தூண்டியது அந்த கேள்வி.

சிந்தித்தவனாக கீழே திரும்பினேன். வீட்டினுள் சென்று ஏதோ ஒரு பொருளைத் தேடிக் கொண்டிருக்கும் பொழுது எதேர்ச்சையாக அலமாரியில் கையில் பட்டது இந்த புத்தகம்.

‘அகதிகள்’ என்பது புத்தகத்தின் பெயர். அதன் பின்பக்க அட்டையில் “இன்று அகதிகளாக மாறி இருக்கும் அனைவருமே நேற்று வரை நம்மைப் போல் இயல்பாக இருந்தவர்கள் தான். இன்று இயல்பாக இருக்கும் யார் வேண்டுமானாலும் நாளை அகதிகளாக உருமாறலாம்” என்று ஆசிரியர் எழுதியிருந்தது சிந்தனையில் மூழ்கியிருந்த எனது மனதை பதைபதைப்பைக் கொண்டு நிரப்பியது .

இருப்பினும்

{ قُل لَّن یُصِیبَنَاۤ إِلَّا مَا كَتَبَ ٱللَّهُ لَنَا هُوَ مَوۡلَىٰنَاۚ وَعَلَى ٱللَّهِ فَلۡیَتَوَكَّلِ ٱلۡمُؤۡمِنُونَ }

(ஆகவே, நபியே! அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறொன்றும் நிச்சயமாக எங்களை அணுகாது. அவன் தான் எங்கள் இறைவன்” என்று நீர் கூறுவீராக. நம்பிக்கையாளர்கள் அனைவரும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைக்கவும்.
[9: 51]

என்ற இறைவனின் அறிவுரை ஆறுதலாக இருந்தது.

“ஓடுவதற்கு தெம்பு வேண்டாமா ?” என்று அக்கறையுடன் அறிவுரை வழங்கியது ‘என் தந்தை’ என்ற ஒரு தனி‌ நபர் மட்டும் அல்ல.

’20 ஆண்டுகள் தன் தாய் நாட்டிற்காக இந்திய ராணுவத்தில் சேவையாற்றியவர், ‘ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையில் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டவர்களில் ஒருவர்.
இன்று தன் மகனுக்கு “இந்தியாவிலிருந்து விரட்டி அடிக்கப்படும் போது ஓடுவதற்கு தயாராக இரு.” என்று அறிவுரை கூறுகிறார்.!!!

என்ன ஒரு ஆச்சரியம் கலந்த அவலம்!

வரலாறு என்னும் புத்தகத்தின் கடந்த கால பக்கங்களை புரட்டிப் பார்த்தால், அகதிகள் பட்டியலில் அதிகமாக இடம்பெறுபவர்கள் இஸ்லாமியர்கள் தான் என்பதில் சந்தேகம் இல்லை .

இதை நூலாசிரியர் மருதன் அவர்களும் தெளிவுபடுத்துகிறார்கள்.

“அகதிகளில் கணிசமானவர்கள் இஸ்லாமியர்களாக இருப்பது அவர்களுடைய நிலைமையை மேலும் சிக்கலானதாக மாற்றுகிறது.” (ப:20)

ஆப்கானிஸ்தான், துருக்கி, ஏமன், லிபியா, சோமாலியா, சூடான், வடகிழக்கு நைஜீரியா என்ற ஆசிரியர் குறிப்பிட்ட இந்த நாடுகள் அல்லாமல் சிரியா, ரோஹிங்கியா, உய்கர், குஜராத், இலங்கை, பாலஸ்தீன், ஸ்பெயின் என்று தொடங்கி,… மக்காவிலிருந்து கற்பனைக்கு எட்டாத கஷ்டங்களாலும் இடைவிடாத இன்னல்களாலும் மதினாவை நோக்கி வெளியேறிய இறைத்தூதரும் அவரது தோழர்களும் …. எனத் தொடர்ந்து அதற்கு முந்தைய சமுதாயங்களில் இஸ்லாமியர்கள் இறை நம்பிக்கை கொண்ட ஒரே காரணத்தால் வெளியேற்றப்பட்ட எத்தனையோ நிகழ்வுகளை இறைவன் வசனங்களாக இறக்கியுள்ளான்.

“தங்கள் வீடுகளை விட்டும், தங்கள் பொருள்களை விட்டும் (அநியாயமாக) வெளிப்படுத்தப்பட்டு (மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வந்த ஏழைகளுக்கும்..”
(59:8)

“நிராகரித்தவர்கள் தங்களிடம் வந்த (நமது) தூதர்களை நோக்கி, ‘‘நிச்சயமாக நீங்கள் எங்கள் மார்க்கத்தில் திரும்பிவிட வேண்டும். இல்லையேல், நாங்கள் உங்களை எங்கள் ஊரிலிருந்து வெளியேற்றி விடுவோம்” என்று கூறினார்கள்.”
(14:13)

“அவருடைய மக்களில் கர்வம்கொண்ட தலைவர்கள் (அவரை நோக்கி) ‘‘ஷுஐபே! நீங்களும் உங்களை நம்பிக்கை கொண்டவர்களும் எங்கள் மார்க்கத்திற்கு திரும்பிவிட வேண்டும். இல்லையென்றால், நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் ஊரிலிருந்து துரத்தி விடுவோம்” என்று கூறினார்கள்.”
(7:88)

நூலாசிரியர் அகதிகள் படும் அவலங்களை விரிவாக கூறும்பொழுது மனித உள்ளம் எவ்வளவு சுருங்கி போய் உள்ளது என்பது தெளிவாகிறது.

மகன் முன் நெற்றிப்பொட்டில் தோட்டா வாங்கி இறந்து கிடக்கும் தந்தை ;குழந்தையைப் பிரிந்து வாழும் தாய்மார்கள்; வதை முகாம்களில் வதைபடும் சிறுவர்கள், பெரியவர்கள், இளைஞர்கள், நோயாளிகள், ஊனமுற்றோர்கள், ஏழைகள், பணக்காரர்கள்.
இன, நிற, மத வெறியர்களுக்கு இவர்களை பாகுபாடு பார்க்கத் தெரியாதது போல, வானிலிருந்து பொழியும் குண்டுகளுக்கும் இவர்களை பிரித்துப் பார்க்க தெரியவில்லை. அதை அழகாக நூலாசிரியர் விவரிக்கிறார்.

“பாகுபாடின்றி அனைவரையும் அது சிதறடித்துக் கொன்றது. பயங்கரவாதிகளையும், சிவிலியன்களையும் மட்டுமல்ல; முதியோர்களையும் பெண்களையும் குழந்தைகளையும் கூட பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை அந்த குண்டுகளுக்கு..! அலுவலகம், பள்ளிக்கூடம், குடியிருப்பு, மைதானம் என்று எங்கே வீசினாலும் விழ வேண்டியது; வெடிக்க வேண்டியது.. மனிதர்களை சிதறடிக்க வேண்டியது..! ஒரு வெடிகுண்டுக்கு இதைத் தவிர வேறு எதுவும் தெரியாது” (ப:24)

இனக்குழுக்கள் இடையே வெடிக்கும் கலவரங்களும் அகதிகள் உருவாவதற்கு பெரும் காரணம் வகிக்கின்றன.

ஆப்பிரிக்காவில் உள்ள புருண்டி நாட்டு மக்களுக்கு இடையே வெடித்த இனக்குழு மோதல்களை மருதன் அவர்கள் விவரிக்கிறார்கள்.

“அங்கே பெரும்பான்மையாக இருப்பவர்கள் ஹுட்டு இன மக்கள். சிறுபான்மையினர் டுட்ஸி இன மக்கள்.
இருவருமே கருப்பினத்தவர்கள். இருவருமே பண்டு மொழி பேசுபவர்கள். இருவருக்குமே பிரெஞ்சு மொழி நன்றாகத் தெரியும். இருவருமே கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டவர்கள். ஒருவர் ஹுட்டு இனத்தவரா டுட்ஸியா என்பதை கண்டறிவது அத்தனை சுலபமல்ல . அச்சு அசல் ஒன்று போலவே இருப்பார்கள். அந்நியர்களான நாம் மட்டுமல்ல , இந்த இரு குழுவினரின் மரபணுக்களையும் பரிசோதித்த மருத்துவ ஆய்வாளர்கள் கூட இந்த இருவருக்கும் இடையிலான வேறுபாட்டை கண்டறிவது கடினம் என்னும் முடிவுக்கு வந்து சேர்ந்துள்ளனர். கண்டிப்பாக இருவரையும் வேறுபடுத்தி தீர வேண்டுமானால் ஒரு அம்சத்தை குறிப்பிடலாம். ஒரு ஹுட்டுவைவிட ஒரு டுட்ஸி சில அங்குலங்கள் உயரமாக இருப்பார் அவ்வளவுதான்.

ஆனால் இந்த இரு குழுக்களுக்கும் இடையிலான பகைமையும், அதன் காரணமாக பெருக்கெடுத்து ஓடிய ரத்த ஆறும் வரலாறு காணாதது.” (ப:39)

விசாரணை நாளில் இறைவன் தன்னுடைய கடமைகளைப் பற்றி விசாரிக்கும் பொழுது முதலில் தொழுகையில் இருந்து தொடங்குவான்.

பிற மனிதர்களின் உரிமைகளைப் பற்றி விசாரிக்கும் பொழுது, அநியாயமாக சிந்தப்பட்ட ரத்தங்களை பற்றி, அநீதமாக பறிக்கப்பட்ட உயிர்களைப் பற்றிதான் கேள்வி கணக்கை துவங்குவான்.

இப்பூமியில் இணைவைப்பு என்னும் பாவத்தில் மனிதனை விழ வைப்பதற்கு முன்னதாகவே , கொலை என்னும் பாவத்தில் விழ வைத்தவன் தான் சைத்தான்.

ஆதிமனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய இரு மகனாரில் ஒருவர் மற்றவரின் ரத்தத்தை சிந்தினார்.

இது போன்ற கலேபரமான சூழல்களில் பெரிதும் பாதிக்கப்படும் கூட்டம் பெண்கள் கூட்டம் தான். மானத்தின் முன் உயிர்களை துச்சமாக கருதும் பெண்கள் ஏராளம்.

“பெரும்பான்மை பயங்கரவாதத்தைக் காட்டிலும் அஞ்சத்தக்க ஒன்று , அதை ஆதரிக்கும் அரசு” (ப:47)

சிரியாவின் ஹோம்ஸ் என்னும் பகுதியைச் சேர்ந்த காலித் . அகதியாக அடைக்கலம் தேடி ஜோர்டானில் உள்ளார்.

“ஒரு மனிதனின் கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருக்கிறான். அருகில் ஒரு சிறுமி… கீழே தரையில் ஒரு சிங்கம் செத்து விழுந்து கிடக்கிறது.” வீரனே! நீ ஒரு குழந்தையைக் காப்பாற்றி விட்டாய் “என்று எல்லோரும் அவனை பாராட்டுகிறார்கள். அப்போதுதான் அந்த மனிதன் ஒரு முஸ்லிம் என்பது தெரிய வருகிறது. உடனே எல்லோரும் ஒரே குரலில் சொன்னார்கள் “ஒரு அப்பாவி சிங்கத்தை இந்த பயங்கரவாதி அநியாயமாகக் கொன்று விட்டான்! ” என்று. வாட்ஸ் அப்பில் வந்த இந்த செய்தியை பிறருக்கு காண்பித்தார் காலித். அந்த அறையில் சிரிப்பொலி பரவியது.

அந்த அறையில் இருந்த ஒருவர் தான் அகமது என்னும் இன்னொரு அகதி. எத்தனையோ போராட்டங்களுக்குப் பிறகும் நீண்ட காத்திருப்புக்குப் பிறகும் கூட அவருக்கு அடைக்கலம் கிடைக்காததை கருதி அவர் மனம் நொந்து கொள்கிறார் “நான் அகதியாக மட்டும் இருந்திருந்தால் ஒரு வேலை புகலிடம் கிடைத்திருக்கலாம். ஆனால் முஸ்லிமாகவும் இருந்து விட்டதால் அப்பாவி சிங்கத்தை கொன்றவனாக என்னை எல்லோரும் பார்க்கிறார்கள். நாங்கள் வேட்டைக்காரர்கள் அல்ல. வேட்டையாடப்படுபவர்கள் என்று எப்படி இந்த உலகத்திற்கு புரிய வைப்பது?” (ப:58)

“அகதிகளுக்கு மட்டுமல்ல; அவர்களுடைய கதைகளுக்கும் எல்லைகள் கிடையாது!” (ப:21)

ஏக இறைவன் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வளித்திருப்பதைப் போல. இந்த அகதி படுத்தப்படும் பிரச்சனைக்கும் தீர்வு அளித்துள்ளான்.

இறைத்தூதரை முற்றிலும் கட்டுப்பட்டு முழுமையாக பின்பற்றுவதே ஒரே தீர்வு!

மறு உலகத்தின் வெற்றி எப்படி தூதரை பின்பற்றுவதில் இருக்கிறதோ, அதேபோலத்தான் இந்த உலகத்தில் வெற்றியும் மேன்மையும் இறைத்தூதரை முழுமையாக பின்பற்றுவதில் தான் இருக்கிறது.

“தானும், தன் தூதர்களுமே நிச்சயமாக வெல்வார்கள் என்று அல்லாஹ் விதித்து விட்டான். நிச்சயமாக அல்லாஹ் பலவானும் (அனைவரையும்) மிகைத்தவனும் ஆவான்.”
(58:21)

தூதர்களை முழுமையாக பின்பற்றுவது எது என்பதில் சமூக சீர்திருத்தத்தை மேற்கொள்ளும் ஒவ்வொரு அழைப்பாளருக்கும் அறிஞர்களுக்கும் தெளிவு இருக்க வேண்டும்.

ஒவ்வொரு தூதரும் தத்தமது சமூகத்தில் முதலில் ஏற்படுத்திய சீர்திருத்தம் ஓரிறைக் கொள்கை. பிறகுதான் தொழுகை, நோன்பு, தர்மம், பெற்றோருக்கு பணிவிடை செய்தல், அனாதையை அரவணைத்தல், கொடுக்கல் வாங்கலில் நீதமாக இருத்தல், அமானிதம் பேணுதல், மற்ற சீர்திருத்தங்கள் எல்லாம். ஏனெனில் இந்த அனைத்து நன்மைகளும் தவ்ஹீத் இல்லை என்றால் வீணாகிவிடும்.

இறைத்தூதர்கள் முதலில் அழித்தொழித்த சீர்கேடு இணைவைப்பு.
பிறகுதான் வட்டி, விபச்சாரம் ,பொய், அளவையில் மோசடி, மற்ற சீர்கேடுகள் எல்லாம். ஏனெனில் இது அனைத்து பாவங்களுக்கும் மன்னிப்பு உண்டு. ஆனால் இணை வைத்த நிலையில் இறைவனை சந்திக்கும் ஒருவனுக்கு மன்னிப்பே கிடையாது.

எனவே சீர்திருத்தவாதிகள் தூதர்களை பின்பற்றி சீர்திருத்தம் செய்யும்பொழுது சமூகத்தில் வெற்றி பெறும் நம்பிக்கையாளர்கள் உருவாகுவார்கள்.

நிச்சயமாக நம் படையினர்(களாகிய நம்பிக்கையாளர்கள்)தான் வெற்றி பெறுவார்கள்.
(37:173)

‘‘உங்களை அவர்களுக்குப் பின்னர் (அவர்களுடைய) பூமியில் நிச்சயமாக நாம் குடியேறச் செய்வோம்” (என்றும் வஹ்யி மூலம் அறிவித்து) ‘‘இது எவன் என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதைப் பயந்தும், என் அச்சமூட்டலைப் பயந்தும் நடக்கிறானோ அவனுக்கு ஒரு சன்மானமாகும்” என்றும் அவர்களுடைய இறைவன் அறிவித்தான்.”
(14:14)

அடுத்த தொடரில் இறைவன் நாடினால் இன்னும் ஒரு புத்தகத்தோடு சந்திப்போம்…

About the Author

mohammadabusaalih@gmail.com

Leave a Comment